மார்க்கண்டேய முனிவரின் வேண்டுகோளின்படி, பூமி தேவி அவருக்கு மகளாக செண்பக வனத்தில் தோன்றி வளர்ந்து வந்தார். ஒரு சமயம் மகாவிஷ்ணு முதியவர் வேடத்தில் வந்து தமக்கு பெண் கொடுக்கும்படி கேட்டார். முதியவரான உங்களுக்கு உணவில் உப்பு சேர்க்கவும் தெரியாத சிறிய பெண்ணை எப்படி மணம் முடித்துத் தரமுடியும் என்று கேட்க, உன் மகள் சமைக்கும் உப்பு சப்பில்லாத உணவே எமக்கு உகந்தது என்று முதியவர் கூறினார்.
மார்க்கண்டேயர் தமது தவவலிமையால் முதியவர், திருமாலே என்று உணர்ந்தார். மகாவிஷ்ணு காட்சி தந்து ஐப்பசி சிராவண நட்சத்திரத்தன்று பூமி தேவியை மணந்தார். இதனால் பெருமாளுக்கு இங்கு உப்பில்லாத உணவு படைக்கப்படுகின்றது. இத்தலமும் 'உப்பிலியப்பன் கோயில்' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் ஒப்பிலியப்பன், ஸ்ரீநிவாசன் என்னும் திருநாமங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். அவரது வலக்கையில் 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ்' என்ற ஸ்லோகம் வைரங்களால் பதிக்கப்பட்டுள்ளது. தாயார் பூமி தேவி நாச்சியார் பெருமாளுக்கு வலதுபுறத்தில் அமர்ந்த நிலையிலும், பெருமாளுக்கு இடதுபுறத்தில் மார்க்கண்டேயர் அமர்ந்த நிலையிலும் தரிசனம் தருகின்றனர். மார்க்கண்டேயர், பெரிய திருவடி, காவிரி, தர்மதேவதை ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
மார்க்கண்டேய முனிவரின் வேண்டுகோளின்படி, வீதிஉலாவின்போது பெருமாள் தனியாக புறப்பாடு இல்லாமல் எப்போதும் தாயாருடன்தான் எழுந்தருளுவார். இக்கோயிலில் உள்ள மூலவர் திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாகக் கருதப்படுகிறார். அதனால் ஸ்ரீநிவாசன் என்ற திருநாமம் உண்டானது. திருப்பதிக்கு பிரார்த்தனை செய்துக் கொண்டு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனையைச் செலுத்தலாம். மிருகண்டு மஹரிஷியின் பத்தினியின் விருப்பத்திற்கிணங்க இங்கு உப்பில்லாத பிரஸாதம் நிவேதனம் செய்யப்படுவதாகவும் கூறுவர்.
திருமங்கையாழ்வார் 34 பாசுரங்களும், பேயாழ்வார் 2 பாசுரங்களும், நம்மாழ்வார் 11 பாசுரங்களுமாக மொத்தம் 47 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|